அதிகரிக்கும் மயோபியா பிரச்னை... டிப்ஸ்.. டிப்ஸ்...

சிங்கப்பூர், ஜப்பான், சீனா போன்ற கிழக்காசிய நாடுகளில், வரும் 2050ம் ஆண்டில் மக்கள் தொகையில் பாதி பேர், 'மயோபியா' எனப்படும் கிட்டப் பார்வையால் பாதிக்கப்படுவர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் அளவுக்கு அதிகமாக மொபைல் போன், கம்ப்யூட்டர், டேப் என்று மின் சாதனப் பொருட்களை குழந்தைகள் பயன்படுத்துவதால், கிட்டப் பார்வை பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஓய்வே தராமல் மின்னணு சாதனங்களை பார்க்கும்போது, கண்களில் உள்ள தசைகள் சோர்ந்து விடும். மொபைல் போனை 33 செ.மீ., துாரத்தில் வைத்து பயன்படுத்தவும்; இருட்டில் உபயோகிக்கக் கூடாது.

ஒவ்வொரு 5 வினாடிக்கும் கண்களை இமைக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 வினாடிகள், 20 மீட்டர் துாரத்தில் உள்ள பிம்பத்தை பார்க்க வேண்டும்.

20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் கண்களை மூடி ஓய்வு தரலாம். பக்கத்தில் வைத்து மொபைல் பார்த்தால், சில சமயங்களில் அருகில் இருக்கும் பிம்பத்தின் மீது கண்கள் நிலைத்து விடும்.

மயோபியா இருந்தால் சிலருக்கு கண்கள் விரியும். 1 மி.மீ., விரிந்தால், பவர் மைனஸ் 3 ஆக அதிகரிக்கும். இப்படி அதிகரித்துக் கொண்டே போனால், ரெடினா விரிவடையும்.

இதனால், ரெடினாவின் மையத்தில் உள்ள மேக்குலா என்ற பகுதி சிதைந்து, மைனஸ் 20 என்ற அளவுக்கும் பவர் செல்லும்.

15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கண்களின் பவர் 0.5 அளவு அதிகமானால், மேற்கொண்டு அதிகரிப்பதைத் தடுக்க 'டிபோகஸ்' என்ற புதிய லென்ஸ்கள் வந்துள்ளன.

குழந்தைகளுக்கு மயோபியா வராமல் தடுக்க, தினமும் அரை மணி நேரம் காலை வெயிலில் விளையாடினால், சூரியனில் இருந்து கிடைக்கும் புற ஊதாக் கதிர்கள், கண்கள் விரிவடைவதைத் தடுக்கும்.

புரதச்சத்து நிறைந்த சோயா, பொட்டுக்கடலை, கொண்டைக் கடலை உட்பட 20 வகை பருப்புகளை தினமும் இரு வேளை தரலாம்.