நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுண்டைக்காய்

சுண்டைக்காயில் கால்சியம், பாஸ்பரம் வைட்டமின் ஏ, சி, இ உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

ஆரஞ்சு, கொய்யா, பப்பாளியில் இருப்பதை விட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின், 'சி' இதில் அதிகமாக காணப்படுகிறது.

100 கிராம் சுண்டைக்காயில், இரும்பு சத்து - 22.5 மி.கி., கால்சியம் - 390 மி.கி., பாஸ்பரஸ் - 180 மி.கி., அடங்கியுள்ளது. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலுப்படும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய், குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதால், சிறுவயதியேயே உணவில் சேர்த்து சாப்பிட பழக்க வேண்டும்.

சுண்டைக்காயை மாதம் இருமுறை சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிக்கப்படும். மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாகிறது.

புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டு வலி போன்றவைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச் சளி, காசநோய் கோளாறு உள்ளவர்கள், தினமும், 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணையில் வறுத்து தொடர்ந்து சாப்பிட, நோய் கட்டுப்படும்.

இதிலுள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், செரிமான சக்தியைத் துாண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுப்பதுடன், பார்வைத் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் செய்கிறது. சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில், சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.