சுற்றுச்சூழல் மாசுபாட்டை தெரிவிக்கும் தேன்

தேன் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதிலுள்ள பல்வேறு சத்துக்கள் நம் உடலுக்கு நன்மை தருபவை.

ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, தேனில் ஆபத்தான உலோகங்கள் கலந்திருப்பதாகக் கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ட்யூலேன் பல்கலை, அந்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து 260 வகையான தேன் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தது.

அதில் நம் உடலுக்கு நஞ்சாகக் கூடிய லெட், ஆர்செனிக், கேட்மியம், நிக்கல், குரோமியம், கோபால்ட் உள்ளிட்ட 6 முக்கிய உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இயற்கையிலேயே இந்த ஆபத்தான உலோகங்கள் இருப்பினும், தொழிற்சாலை கழிவு வெளியேற்றம், பெட்ரோலிய சுத்திகரிப்பு போன்ற பல காரணங்களால் இவற்றின் அளவு அதிகரித்து வருகிறது.

தண்ணீர், நிலத்தில் இந்த உலோகங்களின் அளவு அதிகரிப்பதால், அதில் வளர்கின்ற தாவரங்களிலும் இவற்றின் அளவு கூடுகிறது. இத்தாவரங்களில் இருந்தே தேனீக்கள் தேனை உருவாக்குகின்றன.

எனவே, ஓரிடத்தில் கிடைக்கும் தேனை வைத்து அங்கு எந்த வகையான நச்சுகள் காணப்படுகின்றன; எந்த அளவுக்குச் சுற்றுச்சூழல் கெட்டுள்ளது என கண்டுபிடிக்க முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த தெளிவான பார்வை கிடைக்கும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.