குறைந்த கலோரிகள் உள்ள காலை உணவுகள் சில...!

ஆம்லெட்... முட்டையின் வெள்ளைக் கருவுடன் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் காளான் ஆகியவற்றை சேர்த்து செய்த ஆம்லெட்டை காலை உணவாக எடுக்கலாம்.

இதனால், ஆரோக்கியத்துடன் உடல் எடையையும் குறைக்கலாம். முட்டையிலுள்ள அமினோ அமிலங்கள் தசை திசுக்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.

கம்பு தோசை... புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் உட்பட பல சத்துக்கள் கம்பில் நிறைந்துள்ளதால், கூழ், புட்டு, ரொட்டி, கம்பு தோசை என ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்க்கலாம்.

இதனால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். சாதாரணமாக தோசை மாவு அரைக்கும் போது அதில் சிறிது ஊறவைத்த கம்பையும் சேர்க்கலாம்.

பச்சைப்பயறு தோசை... முதல் நாள் இரவு ஊறவைத்த பச்சைப் பயறுடன், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து காலையில் அரைத்து தோசையாக செய்து சாப்பிடலாம்.

பச்சைப்பயறில் இரும்பு, புரோட்டீன், கார்போஹைட்ரேட், பைபர், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் உள்ளது.

ஓட்ஸ் இட்லி அல்லது ஸ்மூத்தி... குறைவான கலோரிகள், அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு காலை உணவுக்கு ஏற்றது ஓட்ஸ் இட்லி.

இதனால், உடல் பருமன் மட்டுமின்றி நீரிழிவு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கிறது. இட்லியாக இல்லாவிட்டால், பாதாம் பால் மற்றும் ஓட்ஸை ஸ்மூத்தியாக செய்து 'ஹெல்த்தி டிரிங்க்' ஆக குடிக்கலாம்.