உணவுக்கும், துாக்கத்திற்கும் தொடர்புண்டா?
நாம் உண்ணும் உணவுக்கும், நம் துாக்கத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்., என்ற சர்வதேச அறிவியல் நிறுவனம் புதிய ஆய்வை மேற்கொண்டது.
இதில், மொத்தம் 4,825 பேரின் உணவு முறையும், துாக்க முறையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நம்முடைய உணவில் மாவுச்சத்து, பல வகையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன. மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட நுண் சத்துக்களும் உள்ளன.
ஒவ்வொரு சத்தும் துாக்கத்தை எப்படி பாதிக்கின்றன என்று கண்டறிவது தான் இந்த ஆய்வின் நோக்கம்.
ஆய்வின் முடிவில், புரதம், நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்ல நீண்ட நேரத் துாக்கத்தைத் தரும் என்றும், அதிகமான சோடியம் உள்ள உணவுகள் துாக்கத்தைப் பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது அடிக்கடி இரவில் துாக்கத்தின் இடையே எழுகின்ற சூழல் வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.