நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த ஊதா கலர் முட்டைக்கோஸ்
பாகற்காய், வெண்டை, சுண்டைக்காய், கோவைக்காய் உட்பட பல காய்களை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளலாம். இந்த பட்டியலில் ஊதா நிற முட்டைக்கோஸும் உள்ளது.
இது வைட்டமின் ஏ, சி மற்றும் கே, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கால்சியம், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த பல்துறை காயாக உள்ளது.
இதிலுள்ள ஆன்தோசயனின் கருப்பு கவுனி அரிசியிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
எனவே, வாரத்துக்கு 2 அல்லது 3 முறையாவது சாப்பிடலாம் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் அட்வைஸ். இதை சமைத்தோ அல்லது பச்சையாக சாலட், சூப் என உட்கொள்ளலாம்.
கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ஊதா நிற முட்டைக்கோஸ் வெகுவாக உதவுகிறது.
இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தத்தை சீராக்கி கட்டுக்குள் வைப்பதால் மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது.
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. உடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.