பொதுத்தேர்வில் மாணவர்கள் ஜெயித்துக்காட்ட சில டிப்ஸ்...!

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் முதல் நாள் இரவு 10 மணிக்கு கண்டிப்பாக படுக்க செல்ல வேண்டும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, இரவு படித்தவற்றை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு கட்டாயமாக காலை பிரேக் பாஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய, எண்ணெய் இல்லாத உணவுகளை சாப்பிடலாம்.

தேர்வுக்கு முன் பள்ளியில் மற்ற மாணவர்கள் படிப்பதை பார்த்து, 'அய்யயோ.. நான் இதை படிக்கவில்லையே' என பதட்டத்துடன் புத்தகத்தை புரட்டாமல், அமைதியாக படித்தவற்றை நினைக்கவும்.

வினாத்தாளை வாங்கியதும் உடனே விடைகளை எழுதாமல், பதட்டமின்றி கவனமாக ஒருமுறை படிக்கவும். ரிலாக்ஸ் செய்து கொண்டு நன்றாகத் தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை முதலில் எழுதுங்கள்.

தேர்வு எழுதும் போது கட்டாயமாக நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். எனவே, முடிந்தளவு வேகமாக எழுத முயற்சிக்கவும். இல்லாவிட்டால் ஓரிரு கேள்விகளுக்கு பதில் எழுத முடியாமல் மதிப்பெண்கள் குறையக்கூடும்.

எழுதி முடித்தவுடனேயே விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் கொடுக்காமல், மீண்டும் மீண்டும் ஒரு முறை விடை, கேள்வி எண், உங்கள் பெயர், தேர்வு பதிவு எண் போன்றவற்றை சரிபார்க்கவும்.

தேர்வு முடியும் வரை பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இடம் தராமல், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு என்பது ஆண்டு முழுவதும் படித்த படிப்பை பரிசோதிக்கும் ஒரு கருவியாகும்.

இது பள்ளி வாழ்க்கையின் முடிவல்ல. எனவே, வெற்றியோ.. தோல்வியோ... அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு ஜெயித்துக் காட்டுவோம்.