வெயிலுக்கு இதமாக ஜில்லுன்னு குடிக்கும் முன் கொஞ்சம் யோசியுங்க!
பகல் வேளையில் வெயில் கொளுத்த துவங்கியுள்ளதால், ரோட்டோரங்களில் ஆங்காங்கே தற்காலிக குளிர்பான கடைகள் முளைத்துள்ளன.
இதுதவிர ரோட்டோரம் தள்ளுவண்டி கடைகள் அமைத்தும், பேக்கரி, குளிர்பான கடைகளில் சர்பத், லெமன் ஜூஸ், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
பொதுவாக (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணைய உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்ற கடைகளில் மட்டுமே பழச்சாறு, உணவுப்பொருட்களை வாங்கலாம்.
பாட்டில் குடிநீர், பாக்கெட் உணவுப்பொருட்களின் லேபிளில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முகவரியை சரிபார்த்து வாங்கவேண்டும்.
பழங்கள், இயற்கையான பழச்சாறு, இளநீர், மோர், நுங்கு, நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி உட்கொள்ளவேண்டும்.
பழங்களின் தோலில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், நன்றாக கழுவிய பின் பயன்படுத்த வேண்டும்.
சுகாதாரமற்ற கடைகளில், ஈ மொய்க்கும் பழங்கள், பழச்சாறுகளை வாங்கக்கூடாது. ரசாயன நிறம், சுவையூட்டிகள் கலந்தபழச்சாறு, குளிர்பானங்களை தவிர்க்கவேண்டும்.
செயற்கையாக கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்கி உட்கொள்ளும்போது உடல் உபாதைகள் ஏற்படும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.