அதிகரிக்கும் டீன் ஏஜ் கர்ப்பம்... சவாலாக மாறும் குழந்தைப்பேறு!

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரம், இளம் வயதில் கர்ப்பம் அடைவது அதிகரித்து காணப்படுகிறது.

பாலியல், இனப்பெருக்கம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இளம் வயதில் கர்ப்பமடைவது தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கு, குழந்தை திருமணங்கள், பாலியல் குற்றங்கள், பள்ளி இடைநிற்றல் அதிகரிப்பு, வறுமை, பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

18 வயதுக்கு கீழே குழந்தைப் பேறுக்கு தயாராகும் போது இடுப்பெலும்பு வளர்ச்சி முழுமையாக இருக்காது என்பதால் சுகப்பிரசவத்திற்கான வாய்ப்பு குறையும்.

சிலருக்கு திடீர் ரத்தஅழுத்தம் அதிகரிக்கும் அபாயமுள்ளது.

ரத்தசோகை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவத்திற்கும், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்குமான வாய்ப்பு அதிகம். இவை உடல்சார்ந்த பிரச்னைகள் தான்.

அவர்களே மனதளவில் குழந்தையாக இருக்கும் நிலையில், சரியான எடையுடன் பிறந்த குழந்தைகளை கூட கையாள்வது குறித்த புரிதல் இருக்காது.

இந்நிலையில் எடை குறைந்தோ, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தாலோ அவர்களால் முழுமையாக குழந்தை வளர்ப்பில் ஈடுபட முடியாது.

பெண்ணின் திருமண வயது என அரசு நிர்ணயித்த வயதில் திருமணம் செய்து, அதன் பின் குழந்தை பெற்றால் இதுபோன்ற சிக்கல் வரும் வாய்ப்பு குறையக்கூடும்.