நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை... யூகலிப்டஸ் நறுமண எண்ணெயில் மசாஜ்!

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி சார்பில் யூகலிப்டஸ் எண்ணெய் வாயிலாக, டைப் - 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் மசாஜ் சிகிச்சையளிக்கும் ஆய்வு நடந்தது.

இதில், யூகலிப்டஸ் நறுமன எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து, நீரிழிவால் பாதிக்கப்படவர்களின் வயிற்றில் 20 நிமிடம் மசாஜ் செய்யப்பட்டது.

பூக்கள், தாவரங்கள், மூலிகைகள், வேர்கள், இலைகளின் சாரத்தை தனியாக பிரித்தெடுத்து, நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.

முன்னதாக, அவர்களின் ரத்த சர்க்கரை அளவு, இதயத் துடிப்பு, நுரையீரல் செயல்திறன், மனநலன் சார்ந்த நரம்பியல் செயல்பாடுகள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.

சிகிச்சைக்கு பின், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு சராசரியாக 4.7 % குறைந்திருந்தது. அதேபோல், இதயத்துடிப்பு சீராக இருக்கவும் உதவுகிறது.

இதை தவிர ஆரோக்கியமான மனநிலை மற்றும் சிந்தனை ஆற்றல் மேம்பாட்டுக்கு, யூகலிப்டஸ் நறுமண சிகிச்சை உறுதுணையாக இருப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்தன.

மசாஜ் செய்யும்போது வயிற்றிலுள்ள ரத்தக் குழாய்கள் நெகிழ்ச்சி அடைவதால், ரத்த ஓட்டம் சீராகி, இன்சுலின் சுரப்பு சமன் அடைகிறது.

நரம்புகள் வலுவடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலின் வளர்சிதை மாற்றமும் தேவைக்கு ஏற்ப நடக்கிறது.

யூகலிப்டஸ் தைலத்தில் உள்ள 'யூகலிப்டஸ் க்ளோடிலஸ்' மற்றும் பிற ரசாயனங்கள், நீரிழிவு எதிர்ப்பு திறனை அதிகரிக்கின்றன.

எனவே, இத்தைலத்தின் உதவியால் நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வு கூறுகிறது. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மசாஜ் செய்ய வேண்டுமென தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன.