மழை காலத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... பாதுகாப்பா இருங்க !
பருவமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வைரஸ் காய்ச்சல் பரவுவதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பும் உள்ளது.
கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா போன்றவையும், அசுத்தமான நீர் மற்றும் உணவு வாயிலாக பரவும் டைபாய்டு போன்றவை, மழைக்காலங்களில் வாய்ப்புள்ளதால் விழிப்புணர்வு தேவை.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் பகுதியில் வலி மற்றும் தோல் அரிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சல் அறிகுறிகளாகும்.
மலேரியா அனாபில்ஸ் கொசுக்களால் பரவுகிறது. காய்ச்சல், குளிர், வியர்வை, தலைவலி, உடல்வலி ஆகியவை அறிகுறிகளாகும்.
டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். வீட்டின் சுற்றுப்பகுதியை துாய்மையாக வைத்திருப்பதுடன், தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
பாதிப்பை தவிர்க்க நன்கு வேகவைத்த உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். சுத்தமான, காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்.