கர்ப்ப கால நீரிழிவு பாதிப்பை தடுப்பது எப்படி?
சமீப காலமாக கர்ப்ப கால நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 2% ஆக இருந்த பாதிப்பு, தற்போது 20 - 25 % ஆக அதிகரித்துள்ளது.
சிலருக்கு திருமணத்திற்கு முன், கர்ப்பத்திற்கு முன்பு கூட பாதிப்பு உண்டாகிறது.
இதை தடுக்க, 20 வயதில், குறிப்பாக ரத்த சொந்தங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால், ஆண்டுக்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்வது அவசியம்.
ரத்த சர்க்கரையின் அளவு சாப்பிடும் முன், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின், குறிப்பிட்ட அளவுக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது திருமணமாகி, கர்ப்பம் தரித்தபின் பரிசோதனை செய்யும் போது சிலருக்கு ஹெச்பிஏ1சி எனப்படும் சராசரி ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாக, 7 %க்கு மேலுள்ளது.
இதனால் பிறக்கும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன.
திருமணத்திற்கு முன் பாதிப்பு இல்லாவிட்டால், திருமணத்திற்கு பின் கர்ப்பம் தரித்த, 8வது வாரத்தில் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின், பரிசோதனை செய்வது நல்லது.
கர்ப்ப காலத்தில், வளர்ச்சி, செயல்பாட்டிற்கு தேவையான குளுக்கோஸ் தாயிடமிருந்து குழந்தைக்கு செல்வதால், சாப்பிட்ட பின் ரத்த சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.
அதன்பின், 12, 16, 24, 32 வது வாரங்கள் என்று கர்ப்ப காலம் முழுதும் குறிப்பிட்ட அளவுக்குள் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும்.