கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாம்பே ரவா சீடை!

தேவையானவை: பாம்பே ரவை - ஒன்றே கால் கப், வறுத்துப் பொடித்த உளுந்து மாவு- கால் கப், தேங்காய்த் துருவல் - நான்கு தேக்கரண்டி

பெருங்காயத்துாள் - அரை தேக்கரண்டி, மிளகு, சீரகப் பொடி - தலா ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேஜைக்கரண்டி, எண்ணெய், தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு.

செய்முறை: வெறும் வாணலியில் ரவையைப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்.

பிறகு, ஒரு கிண்ணத்தில் வறுத்துப் பொடித்த உளுந்துப் பொடி, தேங்காய்த் துருவல், பெருங்காயத் துாள், மிளகு, சீரகப் பொடி, நெய், உப்பு எடுக்கவும்.

இவை எல்லாவற்றையும் ஆறின ரவையுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

இந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்த சீடைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பாம்பே ரவா சீடை ரெடி.

குறிப்பு மிளகு, சீரகத்துக்குப் பதிலாக, ஓமம் அல்லது எள்ளு சேர்த்தும் செய்யலாம் வேறு சுவையுடன் ருசியாக இருக்கும்.