விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது.
கேரளாவின் வாகமனில் உள்ள, 125 அடி நீள கண்ணாடி பாலம், நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற பெருமை பெற்றுள்ளது. இதைக்காண சுற்றுலா பயணியர் இங்கு குவிவது அதிகரித்து வருகிறது.
இதை மிஞ்சும் வகையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், 180 அடி நீள கண்ணாடி பாலம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின் கைலாசகிரி மலை உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பாலத்தில் இருந்து, வங்கக் கடலை கண்டு ரசிக்கலாம்.
கடலும், தொடுவானமும் சந்திக்கும் இடம் வரை கழுகு பார்வையில், இயற்கையை ரம்மியமாக ரசிக்கும் வகையில், 7 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த பாலத்தில் நடந்து செல்ல முடியும். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு பேட்சில் 40 பேர் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்படுள்ளது.
கடினமான எடைகளை தாங்கும் அளவுக்கு 40 எம்.எம்., தடிமன் கொண்ட ஜெர்மன் கண்ணாடிகள் மூன்று அடுக்குகளாக இந்த பாலத்தில் பொருத்தப் பட்டுள்ளன.
மலை உச்சியில் இருப்பதால், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும், தாங்கும் அளவுக்கு இதன் கட்டுமானம் வலுவாக கட்டப்பட்டுள்ளது.
சுத்தியலால் அடித்தாலும் உடையாத அளவுக்கு மிகுந்த தடிமனான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால், இயற்கை சீற்றங்களின்போதும், பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என கூறப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து, 862 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கண்ணாடி பாலத்தில், நடந்து செல்லும்போது, பறப்பது போன்ற மெய்சிலிர்க்கும் அனுபவத்தை சுற்றுலா பயணியர் பெற முடியும்.
வரும் 25ம் தேதி, இந்த கண்ணாடி பாலத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார். இதன் அருகிலேயே 5.5 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட திரிசூலம் கட்டப்பட்டு வருகிறது.