அலையோடு விளையாடி... சர்ஃபிங்கில் சாதிப்போமா?

தண்ணீர் விளையாட்டுகளில் அனைவருக்கும் பிடித்தமானது ஒன்று சர்ஃபிங். அலையோடு அலையாக மோதி விளையாடுவது உற்சாகமான அனுபவமாகும். முதல் முறையாக சர்ஃபிங் விளையாடுபவர்களுக்கு...

சர்ஃபிங் செய்ய கட்டாயமாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். சர்ஃபிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா (SFI) அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெற வேண்டும்.

அந்தமான் தீவுகளில் உள்ள சில கடற்கரைகள் எப்போதும் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்காது. எனவே, பயிற்சிப்பள்ளி சான்றளிக்கக்கூடிய இடங்களில் பயிற்சி பெறுவது அவசியமானது.

வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியக் கடல்களில் உள்ள தண்ணீர் மிகவும் வெப்பமானது. எனவே, வெட்சூட்கள் இந்தியாவில் அவசியமில்லாத ஒன்று.

துவக்க நிலையில் எப்போதும் பெரிய சர்ஃப் பலகைகள் தான் வழங்கப்படும். அவை சிறந்த மிதவை தன்மையுடனும், நீண்ட நாட்களுக்கும் பாதுகாப்பு தன்மையுடன் இருக்கும் என்பது பயிற்சியாளர்களின் கருத்தாகும்.

சர்ஃபிங் செய்யும்போது, ​​போர்டில் எழுந்து நிற்க அதிக நேரம் எடுக்காமல், விரைவாக செயல்பட வேண்டும். இது 'பாப்-அப்' என அழைக்கப்படுகிறது.

ஒருசிலர் முதலில் முழங்காலில் எழுந்திருக்க முயற்சிப்பர். அப்போது பலகையில் எடை மாறுவதால், சமநிலையை மீறி விழக்கூடிய வாய்ப்புள்ளது.

போர்டின் முன்னால் அதிக நேரம் நின்றால் தண்ணீருக்கடியில் செல்ல வாய்ப்புள்ளது; நகர்ந்து செல்லவும் முடியாது. எனவே, கால்களை போர்டில் எப்படி வைப்பது என்று உரிய பயிற்சி செய்ய வேண்டும்.

துவக்கநிலையில் நீங்கள் கீழே பார்க்கவே கூடாது. இல்லாவிட்டால் சமநிலையை இழந்து, திசை திருப்பப்படுவீர்கள். நீங்கள் செல்ல விரும்பும் திசையை மட்டுமே பார்க்க வேண்டும்.

தண்ணீரில் சர்ஃபிங் செய்வதால் உடலில் நீர்ச்சத்து குறைவதால், அதிகளவில் தண்ணீர் குடிப்பது அவசியமானது. அதேப்போல் பயிற்சிக்கு முன்னதாக சாப்பிட எளிமையான உணவை தேர்ந்தெடுக்க வேண்டும்.