ஆஸ்கர் விருது வென்ற 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்'

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆவண திரைப்பட பிரிவில், நம் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற டாகுமெண்டரி குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

குனீத் மோங்கா தயாரிப்பில், கார்த்திகி கொன்சால்வெஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆவண திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம், முதுமலை தேசியப் பூங்காவில் யானைகளை வளர்க்கும் பொம்மன், பெல்லி என்ற தம்பதிகளைப் பற்றிய கதையாக இந்த 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

யானைகள் முகாமில் பராமரிக்கப்படும், தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளுக்கும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை சித்தரித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2022ம் ஆண்டு இந்த குறும்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது.

இதே பிரிவில் இதற்கு முன்பு 1969ல் 'த அவுஸ் தட் ஆனந்தா பில்ட்', 1979ல் 'அன் என்கௌன்டர் வித் பேசஸ்' என்ற படங்களும் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிட்டன. ஆனால், அவை விருதுகளை வெல்லவில்லை.

இப்படத்திற்காக 5 வருடங்கள் வரை உழைத்திருக்கிறார் படத்தை இயக்கிய பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ். தயாரிபாளரான குனீத் மோங்காவும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு பெண்கள் தங்களது இந்தியப் படைப்பு மூலம் இந்திய மண்ணுக்கும், இந்தியப் பெண்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.