மட்டன் கோலா உருண்டை செய்வது இப்படித்தான் !

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி 1/2 டே.ஸ்பூன் சோம்பு, 1/4 டீஸ்பூன் குருமிளகு, 8 சிவப்பு மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 2, 1 டே.ஸ்பூன் மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும்.

பின், பொடிப்பொடியாக நறுக்கிய 1 வெங்காயத்தை சேர்க்கவும். இவை நன்றாக வதங்கக்கூடாது; இல்லாவிட்டால் சுவை மாறக்கூடும். எனவே, பாதியளவு வதங்கியவுடனேயே 1 டே.ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.

தொடர்ந்து, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டே.ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் 1/2 கிலோ மட்டன் கீமாவை சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் குறைவான தணலில் கைவிடாமல் வதக்கவும். மட்டன் கீமா வேக 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகக்கூடும்.

எனவே, நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு, கீமாவை ஆற விடவும். பின், மிக்சி ஜார் அல்லது பிளெண்டரில் இந்த கலவையை நன்றாக அரைக்கவும்.

அரைத்த கீமா கலவையுடன் 4 டே.ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு, பாதி முட்டை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பிசையவும்.

இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, கடாயில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி பொரித்தெடுத்தால், இப்போது சுவையான மட்டன் கோலா உருண்டை ரெடி.