'பிளே-ஆப்' சுற்றில் குஜராத்: சுப்மன் கில் சதம்
ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' குஜராத், ஐதராபாத் அணிகள் மோதின.
குஜராத் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் விரிதிமன் சகா 'டக்-அவுட்' ஆனார்.
நடராஜன் வீசிய 6வது ஓவரில் சுதர்சன், சுப்மன் தலா ஒரு பவுண்டரி அடிக்க, 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் குஜராத் அணி 65/1 ரன் எடுத்திருந்தது.
அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (8), புவனேஷ்வர் குமார் 'வேகத்தில்' ஆட்டமிழந்தார். நடராஜன் பந்தில் டேவிட் மில்லர் (7) சரணடைந்தார். ராகுல் டிவாட்டியா (3) நிலைக்கவில்லை.
அபாரமாக ஆடிய சுப்மன்கில், பிரிமியர் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரின் முதலிரண்டு பந்தில் சுப்மன் (101), ரஷித் கான் (0) அவுட்டாகினர்.
குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது. ஷனகா (9) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு குஜராத் பவுலர்கள் தொல்லை தந்தனர். ஷமி 'வேகத்தில்' அன்மோல்பிரீத் (5), கேப்டன் மார்க்ரம் (10), திரிபாதி (1) வெளியேறினர்.
அபிஷேக் சர்மா (1) ஏமாற்றினார். மோகித் சர்மா பந்தில் சன்விர் சிங் (7), அப்துல் சமத் (4), மார்கோ ஜான்சன் (3) அவுட்டாகினர். தனிநபராக போராடிய கிளாசன் (64) அரைசதம் கடந்தார். புவனேஷ்வர் (27) ஆறுதல் தந்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி (18 புள்ளி) முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது.