சர்வதேச டென்னிஸ்... விடைபெற்றார் சானியா!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 36. கடந்த 2003 பிப்.,ல் தனது சர்வதேச டென்னிஸ் பயணத்தை துவக்கினார்.
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஒற்றையர் பிரிவில் 2005 யு.எஸ்., ஓபன் டென்னிஸில் அதிகபட்சம் 4வது சுற்றுவரை முன்னேறினார். காயம் காரணமாக 2012 முதல் இரட்டையர் பிரிவில் மட்டும் கவனம் செலுத்தினார்.
சமீபத்திய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் போபண்ணாவுடன் இணைந்து பங்கேற்றார். இதன் பைனலில் வீழ்ந்த இவர், இத்துடன் சர்வதேச டென்னிஸ் அரங்கில் இருந்தும் விடை பெற்றார்.
பெண்கள் டென்னிஸ் ஒற்றையரில் 1, இரட்டையரில் 43, கலப்பு இரட்டையரில் 3 என மொத்தம் சானியா 47 முறை கோப்பை வென்றுள்ளார். இதுதவிர ஐ.டி.எப்., அரங்கில் 18 கோப்பை கைப்பற்றியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக 2003 முதல் சானியா 257 சர்வதேச தொடர்களில் களமிறங்கினார். இதில் 486 போட்டகளில் வெற்றி பெற்றார்; 223ல் தோல்வியடைந்தார்.
6 தங்கம்... ஆசிய விளையாட்டில் சானியா 2006, 2014ல் கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றார்; 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளார். ஆப்ரோ - ஆசிய விளையாட்டில் 2003ல் 4 தங்கம் கைப்பற்றினார்.
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையரில் 3 (விம்பிள்டன் 2015, யு.எஸ்., ஓபன் 2015, ஆஸி., ஓபன் 2016), கலப்பு இரட்டையரில் 3 என மொத்தம் 6 கோப்பை வென்றுள்ளார்.
'இந்தியாவுக்காக 4 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. பல்வேறு போட்டிகளில் சாதித்த திருப்தியுடன் விடைபெறுகிறேன்' எனக் கூறியுள்ளார் சானியா.