100 வது டெஸ்டில் அஷ்வின்... கிடைக்குமா கேப்டன் கவுரவம்?

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 37. கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். 3 டெஸ்டில் 22 விக்கெட் சாய்த்த இவர், தொடர் நாயகன் ஆனார்.

சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 500வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய அஷ்வின், இதுவரை 99 டெஸ்ட் (507 விக்.,), 116 ஒருநாள் (156), 65 'டி-20' (72) போட்டியில் பங்கேற்றுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 500வது விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலராக திகழ்கிறார் அஷ்வின் (507 விக்.,). அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் கும்ளேவுக்கு (619) அடுத்து உள்ளார்.

மார்ச் 7-11ல் தர்மசாலாவில் நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டி, அஷ்வினின் 100வது டெஸ்ட் ஆக அமைய உள்ளது.

இதுவரை, டெஸ்டில் 35 முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கிலும் கைகொடுக்கும் அஷ்வின் 5 சதம், 14 அரைசதம் உட்பட 3309 ரன் எடுத்துள்ளார்.

இருப்பினும், அன்னிய மண்ணில் நடக்கும் தொடர்களில் 'லெவன்' அணியில் அஷ்வின் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதால் விமர்சனம் எழுந்தது.

கோலி விலகிய போது, டெஸ்ட் அணி கேப்டனாக அஷ்வின் நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும், கடைசியில் மூன்று வித அணிக்கு கேப்டன் என்ற அடிப்படையில் ரோகித், வாய்ப்பை தட்டிச் சென்றார்.

தற்போது 100வது டெஸ்டில் இவரை கேப்டனாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.