பசுமை நிறைந்த நினைவுகளே... கோலியின் இனிய தருணங்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. மகன் பிறந்ததால் லண்டனில் இருந்த இவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை.

இரண்டு மாதங்களுக்கு பின் இந்தியா திரும்பினார். நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் துவக்க வீரராக அசத்தினார்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற இவர், உலக கோப்பை தொடருக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்திய அணியில் தகுதி அடிப்படையில் கோலி இடம் பெறுவாரா அல்லது ரசிகர்களை கவர்ந்திழுப்பவர் என்ற முறையில் வாய்ப்பு பெறுவாரா? என இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், என்னிடம் இன்னும் திறமை இருக்கிறது. 'டி-20' போட்டிகளில் துவக்க வீரராக வருவதால், அதிரடியாக ரன் எடுக்க வேண்டும்.

விக்கெட்டுகள் விரைவாக சரிந்தால், அதற்கு ஏற்ப விளையாட வேண்டியது அவசியம்.

கடந்த இரு மாதங்களாக வெளிநாட்டில் (இங்கிலாந்து) குடும்பத்துடன் பொழுதை செலவிட்டேன். அங்கு யாரும் எங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

சாதாரண மனிதர்களை போல வாழ்க்கையை வாழ்ந்தோம். குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்து, குடும்பமாக ஒன்றாக பழகி கழித்த தருணங்கள் இனிமையானவை. இந்த வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி.

இந்தியா திரும்பியதும் ரசிகர்களின் வாழ்த்து சத்தம் அதிகமாக இருந்தது. பழைய வாழ்க்கைக்கு திரும்பியதை உணர்ந்தேன்.

ரசிகர்கள் என் மீது பொழியும் அன்பு, ஆதரவு என்றும் மறக்க முடியாது. இதுவே என் நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என கோலி கூறியுள்ளார்.