தினமும் எவ்வளவு கிராம் உப்பு உடலுக்கு தேவை?

சோடியம் குளோரைடு என்ற உப்பு உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் மிகவும் தேவையானது. குறிப்பாக மூளை செயல்பாட்டிற்கு சோடியம் தேவை.

அது கிடைக்கவில்லை என்றால் உடல் செயலிழந்துவிடும். சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள். எனவே நம் உணவில் சோடியம் குறையவும் கூடாது, அதிகமாகவும் கூடாது.

அதுவே தேவைக்கு அதிகமாக உடலில் உப்பு அதிகம் சேர்ந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். பக்கவாதம், இதய செயலிழப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு உப்பே முதல் காரணம்.

ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பை மட்டுமே ஒருவர் எடுத்து கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

ஆனால் தினமும் ஒருவர் சராசரியாக 8ல் இருந்து 10 கிராம் அளவு உப்பு எடுத்துக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகப்படியான உப்பின் அளவை கட்டுப்படுத்த பழங்கள், காய்கறிகள் அதிக அளவில் எடுக்க வேண்டும். இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் நாம் தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, ஓட்டப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு வெளியேறும்.

உப்பு சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் அதிக உப்பைக் கொண்ட துரித உணவுகள், அப்பளம், ஊறுகாய், வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாமல் உப்பு சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.