வெற்றித்திருமகளே வருக... இன்று (அக்.5) விஜயதசமி !
எந்த செயலை தொடங்கினாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறோம். அந்த வெற்றியை அருளும் நாளே விஜயதசமி.
இந்நாளில் பள்ளியில் சேர உள்ள குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வதும், இசை, பாட்டு, நடனப் பயிற்சி தொடங்குவதும் சிறப்பு.
எழுத்துப் பயிற்சியை தொடங்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெறுவதும் நல்லது.
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, 10ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே 'விஜய தசமி' என்று கொண்டாடப்படுகிறது.
சக்தியாக தோன்றிய அம்பாள், அசுரர்களை அழித்து விட்டு, சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது, விஜயதசமி அன்று தான்.
இங்கு மகிஷாசுரனை சக்தி வென்ற நாளாக கோவில்களில் வழிபடும் அதே சமயத்தில், வடமாநிலங்களில் ராமன் ராவணனைக் கொன்ற நாளாக 'ராம்லீலா' விழாவாக கொண்டாடப்படுகிறது
பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி, ராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரின் உருவப்பொம்மையை ராமர் வேட மணிந்து, அம்பெய்து எரியூட்டுகின்றனர்.
மைசூரில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து, ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என்று அப்போதைய மன்னர் காலத்திலிருந்து, தற்போது வரையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.