ஆரோக்கியம் காக்கும் மசாலா தேநீர்

அஞ்சறைப்பெட்டியில் உள்ள மசாலாப் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் சஞ்சீவி மூலிகைகள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

தினமும் குறிப்பிட்டளவு இந்த மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்தால் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். தினசரி உணவில் சேர்க்க முடியாவிட்டாலும், தேநீராக குடிக்கலாம்.

காலையில் எழுந்தவுடன் டீ, காபிக்கு மாற்றாக கிரீன் டீ போன்ற ஆரோக்கிய பானங்களுக்கு பலரும் மாறி வருவது குறிப்பிடத்தக்கது. மசாலா தேநீர் தயாரிக்கும் வழிமுறையை பார்க்கலாம்.

சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிமொக்கு, மிளகு, வெந்தயம், ஏலக்காய் மற்றும் இஞ்சி போன்றவற்றை தேநீர் தயாரிக்க பயன்படுத்தலாம்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி, சிறிதளவு மசாலாப் பொருட்களை சேர்த்து கொதிக்க விடவும். பின், அடுப்பை மிதமான தணலில் வைத்து, பாதியாக வற்ற விடவும்.

ஆறியவுடன் அதை வடிகட்டினால் இப்போது ஆரோக்கியமான மசாலா தேநீர் ரெடி. இதை அப்படியேவும் குடிக்கலாம். அல்லது இனிப்புச்சுவைக்கு சிறிது தேன் சேர்க்கலாம்.

எலுமிச்சை சாறு பிழிந்தும் சேர்க்கலாம். விருப்பத்துக்கேற்ப ஓரிரு புதினா, துளசி இலைகளையும் சேர்க்கலாம்.