மூட்டுவலி வராமல் இருக்க வழிகள் என்னென்ன? இளமையில் பழகு!

நடக்கும்போது நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது.

இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே உடல் எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலியைத் தவிர்க்க முடியும்.

முழங்கால் மூட்டுக்கு வலிமை தருகின்ற யோகாசனங்களை முறைப்படி செய்துவந்தால் மூட்டுவலியைத் தள்ளிப்போட முடியும்.

இளம் வயதிலிருந்தே பால், பால் பொருள்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால், அங்குள்ள குருத்தெலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கப்படுகிறது.

தினமும் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் - டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.

சிறு வயதிலிருந்தே நடை, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும்.