இரைப்பை கேன்சரை துாண்டும் ஊறுகாய் வகைகள்
நம் நாட்டில் இரைப்பை கேன்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகிய இரண்டும் இரைப்பை கேன்சர் வருவதற்கான அபாயகரமான காரணிகள்.
பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக அளவில் ஊறுகாய் வகைகள், சிவப்பு இறைச்சியை அதிக அளவில் சாப்பிடும்போது, இரைப்பை கேன்சர் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
இதுதவிர, சமீப ஆண்டுகளில், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இதில், 'நைட்ரேட், நைட்ரைட்' என்ற இரு வேதிப் பொருட்கள் உள்ளன.
இவற்றில் நைட்ரைட் என்ற பொருள் சுத்திகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஊறுகாய் வகைகள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் அதிகம் உள்ளது.
தொடர்ந்து இது போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு, இரைப்பையில் கட்டி வரும் வாய்ப்புகள் அதிகம்.
பரம்பரையாக மரபியல் ரீதியில் இரைப்பை கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதா என்றால், 95 சதவீதம் கிடையாது.
உணவுப் பழக்கமும், நடத்தைப் பழக்கமும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன.
கொஞ்சமாக உணவு சாப்பிட்டாலுமே வயிறு நிறைந்த உணர்வு, வாந்தி வரும் உணர்வு, சாதாரணமாக காய்ச்சல், தலைவலி ஆகியவை ஆரம்ப நிலை அறிகுறிகள்.
பசியின்மை, காரணமின்றி உடல் எடை குறைவது, மஞ்சள் காமாலை, மலம் கறுப்பாக, ரத்தம், சளி கலந்து போவது, மலச்சிக்கல், திரும்பத் திரும்ப வாந்தி வருவது இரைப்பை கேன்சர் இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்.