கண்புரையின் அறிகுறிகள் என்ன? பாதிப்பை தவிர்ப்பது எப்படி?
கண்ணின் லென்ஸை மேகமூட்டம் போன்று மறைக்கும் பகுதியை தான் கண்புரை என்கிறோம். இது ஏற்பட்டால் பார்வை மங்கி அன்றாட செயல்பாடுகளில் சிக்கலை ஏற்படுத்தும்.
காலப்போக்கில் இது பார்வையிழப்புக்கு வழிவகுக்கும். பெரும்பாலான கண் புரைகள் வயதுடன் தொடர்புடையவை. வயதாக வயதாக கண்களில் ஏற்படும் இயல்பான மாற்றங்களால் புரை உண்டாகும்.
இவை தவிர கண்களில் அடிபடுதல், குளுகோமா போன்ற பிற கண் பிரச்னைக்காக அறுவை சிகிச்சை செய்த பிறகு கண்புரை வருவதற்கான வாய்ப்பு உண்டு.
கண்புரை லேசாக இருக்கும் போது எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும். வளர வளர பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பார்வை மங்கலாகவோ அல்லது மேகமூட்டமாகவோ இருக்கக்கூடும். நிறங்கள் மங்கித் தெரியும். இரவில் தெளிவாகப் பார்க்க முடியாது.
விளக்குகள், சூரிய ஒளி அல்லது வாகன முகப்பு விளக்குகள் மிகவும் பிரகாசமாகத் தெரியும். இரட்டையாகத் தெரியும்.
கண்புரையிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க சூரிய ஒளியில் செல்லும் போது சன்கிளாஸ் மற்றும் தொப்பி அணியுங்கள்.
கண்களில் காயம் படாமலிருக்க வெல்டிங், டிரில்லிங் போன்ற பவர் டூல்களை பயன்படுத்தும் போது, விளையாட்டின் போது கண்களை பாதுகாக்கும் கண்ணாடி அணியுங்கள்.
புகைப்பதை நிறுத்துங்கள். பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை நிறைய சாப்பிடுங்கள்.