குமுளி... நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்!
கேரளாவில் காடு, மலை, அருவி, ஆறு என இயற்கையோடு இயற்கையாகச் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குமுளி.
தேனி மாவட்டம் கூடலூரிலிருந்து 15 கி.மீ., தூரத்தில் குமுளி உள்ளது. தேக்கடிக்கு அருகில் அமைந்துள்ள இதைச் சுற்றிப் பல இடங்கள் உள்ளது.
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல இந்த பகுதி ஏற்ற இடமாகும். கம்பம், கூடலூர் வழியாகவும், உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு வழியாகவும் குமுளிக்கு செல்லலாம்.
குமுளி பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் தேசிய பூங்காவுக்கு செல்லும் வழியில் உள்ளது சத்திரம் வியூ பாய்ன்ட். இங்குச் செல்ல நிறைய ஜீப் வசதிகள் உள்ளன.
இந்த வியூ பாய்ன்ட்டுக்கு போகும் வழியில் இடுக்கி அணைக்குத் தண்ணீர் செல்லும் பெரியாற்றைப் பார்க்கலாம். ஆறு நிரம்பச் செல்லும் தண்ணீர் நம்மை அழைப்பது போன்று சத்தத்தை எழுப்பும்.
'பொன்னி நதி பார்க்கணுமே' பாட்டை சுகமாக கேட்டுக்கொண்டே கரடு முரடான பாதையில் ஜீப்பில் சென்றால், அடர்ந்த வனச்சோலையில் ஒளிந்திருக்கும் மலை திடீரென வெளிப்பட்டு உங்களை திகைக்க வைக்கும்.
வனப்பகுதிக்கு நடுவில் பெரியார் தேசியப் பூங்காவுக்கு சொந்தமான பகுதியில் போட்டிங் சென்றால், வாடகைக்கு கிடைக்கும் பைனாகுலர்ஸில் தூரத்திலுள்ள மான், யானை போன்ற விலங்குகளைப் ரசிக்கலாம்.
யானைச் சவாரி வசதியும் உள்ளது. பின், மூலிகை தோட்டத்துக்கு விசிட் அடித்து, ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு, காபி போன்ற செடிகள், மரங்களைப் பார்ப்பதுடன், தேவையான பொருட்களையும் வாங்கலாம்.
இங்கு பட்ஜெட்டிற்கு ஏற்ப தங்கும் விடுதிகள் உள்ளது; வாடகைக்கு ஜீப்களும் கிடைப்பதால், எளிதாக குமுளியை சுற்றிப்பார்க்கலாம்; இரண்டு நாட்கள் போதுமானது.