மாணவர்களே... பிரச்னைகள் வரும்.. போகும்.. தற்கொலை எதற்கும் தீர்வல்ல...!

பள்ளி, கல்லுாரி மாணவர்களின் மனதில் கல்வி, அறிவு, விளையாட்டு என வளர்ச்சியை நோக்கி செல்லும் எண்ணம் இருக்க வேண்டும்.

குறிப்பாக மன உறுதி அவசியம். பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம் வர வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள மாணவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கு கூட, தற்கொலை முடிவுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.

எதையும் எதிர்கொள்ளும் மனோபாவம் மாணவர்களிடம் குறைந்து வருகிறதா என்ற கேள்வியை, இச்சம்பவங்கள் எழுப்புகின்றன.

பெற்றோர் கண்டித்ததால், மொபைல் கொடுக்காததால் என சிறு சிறு காரணங்களுக்கும் கூட மாணவர்கள் தங்களின் உயிரை மாய்ப்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் எடுத்துக்கொள்வர். ஆசிரியர் திட்டுவதை, கண்டிப்பதை நல்ல முறையில் எடுக்கும் மாணவர்களும் உள்ளனர்.

அதில் மனமுடைந்து தவறான முடிவு எடுக்கும் மாணவர்களும் உள்ளனர். எந்த பிரச்னைக்குமே, தற்கொலை தீர்வாகாது. இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒன்று.

பெற்றோருக்கு பின், வழிகாட்டுபவர்களாக உள்ளதால், ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பொறுப்பை உணர்ந்தும், சகஜமாகவும் நடக்க வேண்டும்.