காலாவதியான மருந்துகளை கழிவறையில் வீச அறிவுரை...
பொதுவாக நாம் வாங்கும் மருந்துகளில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். குறிப்பிடப்பட்டுள்ள அந்த தேதிக்கு பின், அந்த மருந்தை பயன்படுத்தினால் பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
அந்த வகையில், 17 மருந்துகளின் பட்டியலை சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வலிநிவாரணி, பதற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படும், 'டிரமடால், டேபென்டாடோல், பென்டானில்' போன்ற மருந்துகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
காலாவதியான பின் அல்லது பயன்படுத்தப்படாத நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை, சி.டி.எஸ்.சி.ஓ., வெளியிட்டுள்ளது.
காலாவதியான மருந்துகளை குப்பை தொட்டியில் வீசும்போது, அவை குப்பை அள்ளும் தொழிலாளர்கள் அல்லது குழந்தைகள் கைகளில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும், கால்நடைகள் மற்றும் சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளின் வயிற்றுக்குள் அந்த மருந்து செல்ல வாய்ப்பு அதிகம்.
அதோடு அந்த மருந்துகள் மறுவிற்பனைக்காக மீண்டும் கள்ளச்சந்தைகளுக்கு வரக்கூடிய அபாயமும் உள்ளன.
எனவே இந்த மருந்துகளை குப்பை தொட்டியில் வீசுவதை தவிர்த்து, அவற்றை உடைக்காமல் கழிப்பறைக்குள் வீசி தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.