ஆஸ்துமாவை அதிகரிக்கும் எதிர்மறை சிந்தனையும், மன அழுத்தமும்!

ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் நாட்பட்ட அழற்சி நிலையாகும். இதனால் மூச்சு திணறல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

இதற்கு முக்கிய காரணம் சுவாச குழாய் உட்படலத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது அடைப்பு ஆகும்.

யாருக்கெல்லாம், சுவாசக் குழாய் சுருங்கும் தன்மை உள்ளதோ, அவர்களுக்கெல்லாம் பாதிப்பு வரலாம்; மரபியல் காரணங்களால் 25 % வர வாய்ப்புள்ளது.

ஆஸ்துமாவிற்கான, 90 % காரணங்கள், நாமாகவே உருவாக்கிக் கொள்வது தான். தொழிற்சாலை மாசு, வாகன புகை இதில் முக்கியமானவை.

ஊதுபத்தி, சாம்பிராணி புகை, வாசனை திரவியங்கள், பெயின்ட் போன்றவற்றால், பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் அதிகமாகக்கூடும்.

இவற்றின் பாதிப்பு நேரடியாக தாக்காமல் இருக்க, முகக்கவசம் அணியலாம். முடிந்த வரை, புகை போடுவதை தவிர்க்கலாம்.

ஆஸ்துமா கோளாறு வருவதற்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, மன அழுத்தம். இதை, 'எமோஷனல் ஆஸ்துமா' என்பர்.

அளவுக்கு அதிகமான சந்தோஷம், அளவுக்கு அதிகமான துக்கம் இரண்டுமே, ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.

இந்நிலையில், எதிர்மறை சிந்தனை மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஆஸ்துமாவை அதிகரிக்கும் என்று இத்தாலியிலுள்ள கத்தோலிக்கப் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில், 301 பேரை 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்து இதைக் கண்டறிந்துள்ளனர்.