மன பதற்றத்தால் ஏற்படும் மார்பு இறுக்கம்!
பய உணர்வின் வெளிப்பாடு பதற்றம். ஏதாவது தவறாக நடந்து விடுமோ என்ற பய உணர்வால் உடலில் ஏற்படும் இயல்பான எதிர்வினையாகும்.
சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாததாக மாறி, அன்றாட வாழ்க்கை, ஆரோக்கியம், மகிழ்ச்சியை பாதிக்கத் துவங்கும். இந்த பதற்றம், மனதை மட்டுமல்ல, உடலையும் பாதிக்கும்.
மார்பு இறுக்கம், வலி, படபடப்பு, மூச்சுத் திணறல், வயிற்று வலி, குமட்டல், அமிலத்தன்மை, தலைவலி, தலைச்சுற்றல், வியர்வை போன்ற அறிகுறிகள் தென்படும்.
மேலும் உடல் வலி, உணர்வின்மை, நடுக்கம், எப்போதும் சோர்வாக உணர்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகள் காணப்படும்.
ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும் போது, ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்க, உடல் செயல்பாடுகள் வழக்கத்தை விட வேகமாக இருக்கும்.
இதற்கு வசதியாக, மன அழுத்த ஹார்மோன்களான 'அட்ரினலின், கார்டிசால்' அதிக அளவில் சுரந்து ரத்தத்தில் கலக்கும்.
இதனால், தசைகளுக்கு அதிக ரத்தத்தை 'பம்ப்' செய்ய, இதயம் வேகமாக துடிக்கும்.அதிக ஆக்சிஜனுக்காக சுவாசம் அதிகரிக்கும். தசைகள் இறுக்கமடையும்.
மனதும், உடலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்பதை புரிந்து, முதலில் மனதை அமைதிப்படுத்த வேண்டும்.
அதற்கு, சுவாசத்தை கவனித்து, மூச்சை 4 வினாடிகள் உள்ளிழுத்து, 2 வினாடிகள் பிடித்து, 6 வினாடிகள் வாய் வழியாக வெளியில் விட வேண்டும்.
நிதானமாக இதை செய்யும் போது, மூளை பாதுகாப்பாக உணர்கிறது. இதயத் துடிப்பை குறைக்கவும், தசைகளை தளர்த்தவும் இது உதவும்.
தினசரி உடற்பயிற்சி, தினமும் 20 நிமிட நடைபயிற்சி, பதற்ற அறிகுறிகளை குறைத்து, அதிகப்படியான அட்ரினலினை எரிக்க உதவும்.