புரதச்சத்து நிறைந்த குயினோவா கிச்சடி

தேவையானப் பொருட்கள்: குயினோவா, பாசிப்பருப்பு தலா 1/2 கப், ப. பட்டாணி - 2 டீஸ்பூன், பனீர் - 10, வெங்காயம்- 1, இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கேரட் - 1, பூசணி - 1/4 கப்.

ப.மிளகாய் -1, சீரகம் -1 டீஸ்பூன், மிளகு தூள்- 1/4 டே.ஸ்பூன், பட்டை - 1, பெருங்காயம்- 1 சிட்டிகை, ம.தூள், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, உப்பு, நெய் -தேவைக்கேற்ப.

20 நிமிடங்கள் ஊற வைத்த குயினோவா, பாசிப்பருப்புடன், பச்சைப்பட்டாணி சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.

கடாயில் சிறிது நெய் ஊற்றி பச்சை மிளகாய், வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். தொடர்ந்து, நறுக்கிய காய்கறிகளுடன், பனீர், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தேவையானளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு காய்கறிகளை வேக விடவும்.

ஒருசில நிமிடங்கள் கழித்து, வேகவைத்த குயினோவா, பாசிப்பருப்பு மற்றும் பச்சைப்பட்டாணி போட்டு நன்கு கிளறி இறக்கினால் சுவையான, சத்தான கிச்சடி ரெடி.

புதினா சட்னி அல்லது தயிருடன் சூடாக பரிமாறினால் சுவை அள்ளக்கூடும்.

குயினோவா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது; நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த உணவு இது.

இதில், நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் என்பதால் எடை இழப்புக்கு உதவும்.