கலர் கலராக உணவுகளை சாப்பிடும் முன் கவனமாக இருக்கணும்!

ரோட்டோர கடைகள், 'பாஸ்ட்புட்' கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் 'சன்செட் எல்லோ' உட்பட உணவுக்கு அனுமதிக்கப்படாத நிறங்களை பயன்படுத்தி பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

அசைவ உணவுகளில் சிவப்பு நிறத்தையும் இனிப்பு வகைகளில் மிக்சரில் சேர்க்கப்படும் பச்சைநிற பட்டாணி, மஞ்சள், சிவப்பு, பச்சை நிற பூந்திகளும் ஆபத்தானவை.

இவையெல்லாம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிறங்கள் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக சிக்கன் 65, சிக்கன் பிரைடு ரைஸ் போன்றவற்றை பலரும் அடிக்கடி உட்கொள்கின்றனர். ஆனால், இவற்றில் அனுமதிக்கப்படாத சிவப்பு நிறத்தை பயன்படுத்துகின்றனர்.

இவை பார்ப்பதற்கு 'பளபள'வென்று சிவப்பாக தெரிந்தாலும் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியக்கேடாகும்.

ஒவ்வொரு நிறமியும் எந்தளவுக்கு சேர்க்கப்பட வேண்டும் என்ற அளவு உள்ளது. ஒரு சில நிறமிகளை சேர்க்கவே கூடாது என்ற விதியும் உள்ளது.

இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், வயிற்று உபாதைகள், அல்சர், அஜீரண கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தொடர்ந்து சாப்பிடும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேபோல், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் செய்யப்படுவதால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். அது, மாரடைப்பு உள்ளிட்ட இருதய பாதிப்புக்கு வழிவகுக்கும்.