அடினோமயோசிஸ் பாதிப்பு... பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை !

அடினோமயோசிஸ்... இந்த வார்த்தையை, பலரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், இது குறித்து ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்.

பொதுவாக, பெண்களுக்கு 40 - 50 வயதில் மெனோபாஸ் நிலை ஏற்படுகிறது. முன்னதாக அதிக ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்த கட்டிகள் அதிகரிப்பு, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இதே அறிகுறிகள், அடினோமயோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டாலும் தோன்றக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது பெண்கள், 40 வயதை கடந்த பின்னர் மெனோபாஸ் அறிகுறிகள் ஏற்படுவது இயல்பு.

அதே சமயம், அடினோமயோசிஸ் பாதிப்பு இருப்பின், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் சமயங்களில் வலி அதிகம் இருக்கும். இது சாதாரண மெனோபாஸ் அறிகுறி என நினைத்து, பலர் சிகிச்சை எடுப்பதில்லை.

பாதிக்கப்பட்டு இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்தே சிகிச்சைக்கு வருவர். துவக்கநிலையில் கண்டறிந்தால் மருந்துகளை கொண்டே சரி செய்யலாம். தாமதமானால் கர்ப்பப்பையை அகற்றும் நிலை ஏற்படும்.

எனவே, அதிக வலியுடன் ரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய், கட்டியாக ரத்தம் வெளியேறுதல் இருப்பின், அடினோமயோசிஸ் சார்ந்த பரிசோதனை செய்வது நல்லது.

அதேப்போல், அடிக்கடி வெள்ளைப்படுதல், அரிப்பு, துர்நாற்றம் இருப்பின், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான 'பேப்ஸ்மியர்' எனும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இப்பரிசோதனை வாயிலாக, எதிர்காலத்தில் இப்புற்றுநோய் வரும் அறிகுறி இருந்தாலும், முன்பே அறிந்து தக்க சிகிச்சை எடுக்க முடியும். எனவே, பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.