நீண்ட காலமாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் துாசு, குப்பை, ஒட்டடை சேராமல் சுத்தம் செய்ய வேண்டும்.

இவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடக்கூடாது. அழுகிய உணவுப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சுவர்களில் பூஞ்சை சேரக்கூடாது. 'ரூம் ஸ்பிரே' பயன்படுத்த வேண்டாம்.

படுக்கை விரிப்பு, தலையணை உறையை அடிக்கடி மாற்றாவிட்டால் 'டஸ்ட் மைட்' எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் துாண்டும்.

போர்வை, ஊதுவத்தி, கொசுவிரட்டி, சாம்பிராணிப் புகை, கற்பூரம் ஆகியவற்றாலும் ஆஸ்துமா அதிகமாகலாம்.

டூவீலர்களில் முகக்கவசம் அணிந்து செல்லலாம். இளங்காலை நேரம் தோட்டத்து பக்கம் சென்றால் பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமாவைத் துாண்டலாம்.

வளர்ப்புப் பிராணிகளும் இவர்களுக்கு ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளிகளின் இறகு, ரோமம், கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமா அலர்ஜியை ஏற்படுத்தும்.

பஞ்சு, ரைஸ்மில், சிமென்ட் புகை போன்ற இடங்களில் வேலை செய்வதையும் குடியிருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமாவைத் தடுப்பதில் உணவுக்கும் கணிசமான பங்கு உண்டு. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய மற்றும் ரெடிமேட் உணவு, செயற்கை நிறம் கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை தினமும் செய்தால் நுரையீரலின் ஆற்றலை அதிகப்படுத்தலாம்; ஆஸ்துமாவைத் தள்ளி வைக்க முடியும்.