வெற்றித் திருநாள்... இன்று விஜயதசமி !
கல்வி, வீரம், செல்வத்தின் மூலம் நம் வாழ்க்கையையும், நல்ல எண்ணத்தின் மூலம் மனதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே விஜயதசமியின் நோக்கம்.
இந்நாளில் புது முயற்சிகளைத் துவங்கினால் வெற்றி நிச்சயம். எனவே, தொழில் துவங்குதல், பள்ளியில் சேர்ப்பது, இசை, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் துவங்குவது நல்லது.
எழுத்துப் பயிற்சியை தொடங்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெறுவதும் நல்லது.
நவராத்திரி விழாவின் 9 நாட்களும் விரதமிருந்து வழிபட்டவர்களின் இல்லம் தேடி, 10ம் நாளான தசமியன்று அன்னை விஜயம் செய்யும் நாளே 'விஜய தசமி' ஆக கொண்டாடப்படுகிறது.
சக்தியாக தோன்றிய அம்பாள், அசுரர்களை அழித்து விட்டு, சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது, விஜயதசமி அன்று தான்.
இங்கு மகிஷாசுரனை சக்தி வென்ற நாளாக கோவில்களில் வழிபடும் அதேசமயத்தில், வடமாநிலங்களில் ராமன் ராவணனைக் கொன்ற நாளாக 'ராம்லீலா' விழாவாக கொண்டாடப்படுகிறது.
பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி, ராவணன் மற்றும் சுற்றத்தினரின் உருவப்பொம்மையை ராமர் வேடமணிந்து, அம்பெய்யப்பட்டு எரியூட்டுகின்றனர்.
மைசூரில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து, ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அப்போதைய மன்னர் காலத்திலிருந்து, தற்போது வரை கடைப்பிடிக்கப்படுகிறது.