வருவாரா 'தல' தோனி...
''பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனி விளையாடுவார்,'' என, சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 4 போட்டியில் தலா 2 வெற்றி, தோல்வி பெற்றுள்ளது.
சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், 17 பந்தில் 32 ரன் விளாசினார்.
போட்டி முடிந்து 'டிரெசிங் ரூம்' திரும்பிய தோனி முழங்கால் வலியால் நடக்க சிரமப்பட்டார். பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியில் (ஏப். 17, பெங்களூரு) பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காசி விஸ்வநாதன் கூறுகையில், கேப்டன் தோனி காயத்தால் அவதிப்படுவது உண்மைதான். ஆனால், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என தெரிவித்தார்.