வருங்காலம் வசந்த காலம்... வளமான அடுத்த தலைமுறை இந்திய வீரர்கள்

இந்திய அணி கேப்டன் ரோகித் 36, 'சீனியர்' கோலி 35, சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின் 37, ஜடேஜா 35 என பலரும் ஓய்வு காலத்தில் உள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ், ரிஷாப் பன்ட் காயத்தால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் அணியில் கிடைத்த வாய்ப்பை இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்தி, எதிர்கால இந்திய கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.

ஜெய்ஸ்வால் அபாரம்... இங்கிலாந்து தொடரில், மூன்று போட்டியில் இரண்டு இரட்டை சதம் உட்பட 545 ரன் குவித்து, திறமையை நிரூபித்தார் 22 வயது ஜெய்ஸ்வால்.

மும்பை ஆசாத் மைதான கூடாரங்களில் உறங்கி, வருமானத்துக்கு 'பானி பூரி' விற்று கடினமாக போராடி, சர்வதேச அரங்கிற்கு வந்த இவர், இன்று ரன் வேட்டையில் இறங்கி உள்ளார்.

ராஜ்கோட் டெஸ்டில், 41 வயது ஆண்டர்சன் வேகத்தில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்து மிரட்டிய இவர், மூன்று வித கிரிக்கெட்டிலும் ஜொலிக்கிறார்.

சபாஷ் சர்பராஸ்... கோலி, ராகுல் இல்லாத நிலையில் ராஜ்கோட் டெஸ்டில் இந்திய அணியின் 'மிடில் ஆர்டர்' பலவீனமாக காணப்பட்டது.

ஆனால் அறிமுக வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் 26. உள்ளூர் போட்டியில் சாதித்ததை போல, சர்வதேச அரங்கில் சந்தித்த முதல் பந்தில் இருந்தே ரன் வேட்டையில் ஈடுபட்டார்.

இந்திய பேட்டர்களுக்கு பொதுவாக 'ஸ்வீப் ஷாட்' ஆட வராது என்பர். ஆனால் சர்பராஸ் இதுபோல விளையாடித் தான் ரன்மழை பொழிந்தார்.

கடைசியில் துடிப்பான விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார் துருவ் ஜுரல். மூன்றாவது டெஸ்டில் டக்கெட்டை 'ரன் அவுட்' செய்தது சிறப்பாக இருந்தது.

பேட்டிங்கில் நம்பிக்கையுடன் செயல்படுகிறார். மார்க் உட் 146 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி 'ஷாக்' கொடுத்தார்.