தினமும் அரைமணி நேரமாவது சூரிய ஒளியில் நிற்கலாமே !
அன்று நம் முன்னோர்கள் பலரும் சூரிய நமஸ்காரத்தை தினமும் வாடிக்கையாக செய்தனர். இன்றோ, பலரும் சூரிய உதயத்தை பார்ப்பதில்லை. டிஜிட்டல் உலகில் அதற்கெல்லாம் நேரமே கிடைப்பதில்லை.
சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சூரியனின் UVB கதிர்கள் தோலில் உள்ள 7-DHC எனப்படும் புரதத்துடன் தொடர்பு கொண்டு, வைட்டமின் டி- யின் செயலில் உள்ள வடிவமான வைட்டமின் டி3 ஆக மாற்றுகிறது.
இது குடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுகிறது. இதனால், வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க முடியும்.
வைட்டமின் டி அளவு குறையும் போது ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய், மனச்சோர்வு, தசை பலவீனம் உட்பட பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது.
புற்றுநோய் இறப்புகள் மற்றும் இதய நோய்களைக் குறைப்பது, டைப் 1 நீரிழிவு மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றைத் தடுப்பது என இந்த வைட்டமின் டி உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு சில உணவுகளில் கணிசமான அளவு வைட்டமின் டி உள்ளது குறிப்பிடத்தக்கது. வைட்டமின் டி குறைபாட்டுக்கு போதியளவு மாத்திரைகளும் கிடைக்கின்றன.
மாத்திரைகள் குறைபாட்டை சமன் செய்யக்கூடுமே தவிர சூரிய ஒளி அளவுக்கு நன்மைகளை அள்ளித்தருமா என்பது சந்தேகமே. எனவே, இயற்கையான சூரிய ஒளியில் கிடைக்கும் சத்தை பெற முயற்சிக்கலாம்.
வாரத்துக்கு நான்கு நாட்களுக்காவது அரை மணி நேரம் வீதம் சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும். எனவே, தினமும் காலை 7 முதல் 10 மணிக்குள் அரை மணி நேரம் ஒதுக்கலாம்.