பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: சரிந்தது லக்னோ 'பேட்டிங்'

லக்னோவில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் லக்னோ, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு, 'பேட்டிங்' தேர்வு செய்தது.

பெங்களூரு அணிக்கு விராத் கோஹ்லி, டுபிளசி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. குர்னால் பாண்ட்யா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரன் கணக்கை துவக்கினார் கோஹ்லி.

ஸ்டாய்னிஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டுபிளசி, நவீன்-உல்-ஹக் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி, 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் 42/0 ரன் எடுத்திருந்தது.

முதல் விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது ரவி பிஷ்னோய் பந்தில் கோஹ்லி (31) அவுட்டானார். இதன் பின் பெங்களூரு பேட்டர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்தது. ஹசரங்கா (8), ஹேசல்வுட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். லக்னோ சார்பில் நவீன் 3, பிஷ்னோய், மிஸ்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் (0) ஏமாற்றினார். சிராஜ் வீசிய 3வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த குர்னால் பாண்ட்யா (14), மேக்ஸ்வெல் 'சுழலில்' சிக்கினார்.

ஆயுஷ் படோனி (4), தீபக் ஹூடா (1), நிக்கோலஸ் பூரன் (9) சோபிக்கவில்லை. ரவி பிஷ்னோய் (5) 'ரன்-அவுட்' ஆனார். ஹேசல்வுட் பந்தில் நவீன் (13) வெளியேறினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டன. மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அமித் மிஸ்ரா (19), 5வது பந்தில் அவுட்டானார். லக்னோ அணி 19.5 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.