'பிளே ஆப்' செல்லுமா சென்னை

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வென்றால் சென்னை அணி 'பிளே ஆப்' செல்லலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் 'நான்கு முறை சாம்பியன்' சென்னை அணி, கோல்கட்டாவை எதிர்கொள்கிறது.

சென்னை அணி 12 போட்டியில் 15 புள்ளி பெற்று, ஏறக்குறைய 'பிளே ஆப்' வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெறும் பட்சத்தில் 'டாப்-2' இடத்தில் தொடரலாம்.

அணியின் துவக்க வீரர்கள் கான்வே (468 ரன்), ருதுராஜ் (408) சீராக ரன் குவிக்கின்றனர்.

மிடில் ஆர்டரில்' ரகானேயும் (266), ஷிவம் துபே (315 ரன், 10 இன்னிங்ஸ்) உதவுகின்றனர்.

கேப்டன் 'தல' தோனியின் ஆட்டத்தை காணவே சென்னை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த போட்டியில் இரண்டு சிக்சர் அடித்து உற்சாகம் தந்தார். இவரது விளாசல் இன்றும் தொடரலாம்.

வேகப்பந்துவீச்சில் தேஷ்பாண்டே (19 விக்.,) மிரட்டுகிறார். 'டெத்' ஓவரில் 'ஜூனியர் மலிங்கா' பதிரானா (13) நம்பிக்கை தருகிறார்.

தீபக் சகார் (4) துவக்க ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது பலம். சுழலில் ஜடேஜா (16 விக்.,), மொயீன் அலி (9), தீக்சனா (7) கைகொடுக்கின்றனர்.