அஷ்வின் 500... டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது.
'டாஸ்' வென்று களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின் களமிறங்கிய இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் அஷ்வின், தனது 500வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். கும்ளேவுக்கு (619) அடுத்து 500 விக்கெட் சாய்த்த 2வது இந்திய பவுலர் ஆனார்.
முதல் இந்தியர்... குறைந்த டெஸ்டில் 500 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் ஆனார் அஷ்வின் (98 போட்டி). இதற்கு முன் கும்ளே 105 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டினார்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் முரளிதரன் (87) முதலிடத்தில் உள்ளார். முரளிதரன், லியானுக்கு (ஆஸி.,) பின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது 'ஆப் ஸ்பின்னர்' என பெருமை பெற்றார்.
குறைந்த இன்னிங்சில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் அஷ்வின் (184) இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் முரளிதரன் (144, இலங்கை) உள்ளார். கும்ளே (186), வார்ன் (201, ஆஸி.,) 3, 4வதாக உள்ளனர்.
டெஸ்டில் குறைந்த பந்தில் 500 விக்கெட் சாய்த்த பவுலர்களில் மெக்ராத்திற்கு (25,528) அடுத்த இடம் பிடித்தார் அஷ்வின். இவர் 25,714வது பந்தில் இந்த இலக்கை அடைந்தார்.
டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் சாய்த்து, 3000 ரன்னுக்கும் மேல் எடுத்தவர்களில் அஷ்வின் மூன்றாவது இடம் பிடித்தார்.
இந்நிலையில், சாதனை படைத்த அடுத்த சில மணி நேரத்தில் இப்போட்டியில் இருந்து அவசர மருத்துவ காரணங்களுக்காக அஷ்வின் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.