மீண்டு வருவார் கோஹ்லி.. ரோகித் சர்மா ஆதரவு...!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 100 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் நாளை நடக்கவுள்ளது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் 'டாப் ஆர்டர்' பேட்டர்களான கேப்டன் ரோகித், தவான், கோஹ்லி, ரிஷாப் பன்ட் ஆகியோர் ஏமாற்றினர். இதில் கோஹ்லியின் பார்ம் கவலையளிப்பதாக உள்ளது.
சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த 5வது டெஸ்டில் ஏமாற்றிய கோஹ்லி, டி20 தொடரிலும் சோபிக்காததால் விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'கோஹ்லியின் பார்ம் குறித்து ஏன் இவ்வளவு விவாதம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..
கடந்த கால சாதனைகள், அனுபவம், இந்தியாவின் வெற்றிக்கு கோஹ்லியின் பங்களிப்பை நினைத்து பார்க்க வேண்டும். விரைவில் வலிமையாக மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார் ரோகித் சர்மா.