நாலு ஸ்பின்னர் ரகசியம் என்ன? ரோகித் சர்மா சூசகம்
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் ஜூனில் ( 1-29) நடக்கவுள்ளது.
இதற்கான இந்திய உத்தேச அணியில், குல்தீப், சகால், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல் என நான்கு ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருப்பது வியப்பளித்துள்ளது.
ஐ.பி.எல்., தொடர் அடிப்படையில் ஷிவம் துவேவுக்கு வாய்ப்பு அளித்ததும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், நான்கு 'ஸ்பின்னர்'கள் கண்டிப்பாக வேண்டுமென நான் தான் வலியுறுத்தினேன். இதன் காரணத்தை இப்போது சொல்ல மாட்டேன்.
இருவர் 'ஆல்-ரவுண்டர்', மற்ற இருவர் தாக்குதல் பாணியில் பந்து வீசக்கூடியவர்கள். இதனால் எதிரணியின் பலத்தை அறிந்து, வீரர்களை தேர்வு செய்யலாம்.
சமீப காலமாக வாஷிங்டன் சுந்தருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. சர்வதேச 'டி-20' போட்டிகளில் நீண்ட காலமாக அஷ்வின் விளையாடவில்லை. அக்சர் படேல் நல்ல 'பார்மில்' இருந்ததால் வாய்ப்பு பெற்றார்.
'ஸ்பின்னர்'கள் தேர்வில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் அடங்கி உள்ளன. இதன் விபரங்களை விரிவாக குறிப்பிட விரும்பவில்லை. 'மிடில் ஆர்டர்' முக்கியம்.
ஐ.பி.எல்., தொடருக்கு முன்பே 70-80 சதவீத 'உலக' அணியை முடிவு செய்துவிட்டேன். ஒரு சிலருக்கு மட்டுமே ஐ.பி.எல்., செயல்பாடு கணக்கில் கொள்ளப்பட்டது.
இந்திய அணியின் 'டாப்-ஆர்டர்' சிறப்பாக உள்ளது. 'மிடில் ஆர்டரில்' அதிரடியாக ஆடக்கூடிய வீரர் தேவைப்பட்டார். இங்கு தான் ஐ.பி.எல்., அடிப்படையில் ஒருவரை (ஷிவம் துபே) தேர்வு செய்தோம்.
'ஆல்-ரவுண்டர்'களான ஹர்திக் பாண்ட்யா, துபே தங்களது பணியை சிறப்பாக செய்வர் என நம்புகிறேன்.