கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிடுவதால்...!
இரும்பு, வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொய்யாவில் நிறைந்துள்ளன. கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு சூப்பர் ஃபுட் இது.
இதிலுள்ள போலிக் சத்தானது குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி கர்ப்பிணிகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் அமில ரிஃப்ளக்ஸ், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னைகளை கொய்யா நீக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் மாற்றம் காரணமாக மலச்சிக்கல், மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க கொய்யாவிலுள்ள நார்ச்சத்து உதவுகிறது.
இதிலுள்ள பண்புகள் கர்ப்ப கால ரத்த அழுத்தத்துக்கும் தீர்வாக உள்ளன. இதனால், கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவற்றின் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.
கர்ப்பகால நீரிழிவு என்பது சாதாரண ஒன்றாக உள்ளது. இதற்கு, கொய்யா இலை தேநீர் பலன் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கொய்யா பழத்தில் அதிகளவில் உள்ள வைட்டமின் ஏ கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.
கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். கொய்யா பழத்தில் தேவையான அளவுக்கு மெக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகள் தாராளமாக கொய்யா பழம் சாப்பிடலாம்.
அதேவேளையில், இதில் நார்ச்சத்து அதிகமுள்ளத்தால், பழத்தை அதிகமாக சாப்பிடும்போது, வயிற்று உப்புசம், வாயு மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பழுக்காத அல்லது அதிகளவிலான கொய்யாவை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால், அளவோடு சாப்பிட வேண்டும்.
ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் கர்ப்ப காலத்தில் இதை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏதாவது ஆரோக்கிய குறைபாடு இருந்தால் டாக்டரின் ஆலோசனைக்கு பிறகே சாப்பிட வேண்டும்.