முதியோருக்கு ஏற்படும் பல் பிரச்னைகளும், தீர்வுகளும்!

முதியோர் சந்திக்கும் பல பிரச்னைகளில், முக்கியமானது பல். பல் ஆட்டம் கொடுத்து விட்டால் வாழ்க்கையே ஆட்டம் கண்டு விடும் என்று, கவலைப்படும் அளவுக்கு முக்கியமானது இந்த உறுப்பு.

நம் உடலில் நல்ல செரிமானம், நமது வாய் மற்றும் பற்களில் இருந்துதான் துவங்குகிறது. உணவு உமிழ் நீருடன் சேர்ந்து, நன்கு அரைத்து உண்பதால் நல்ல செரிமானம் ஏற்படுகிறது. இதில் பற்களின் பங்கு முக்கியம்.

ஒருவேளை பற்கள் முற்றிலும் விழுந்து விட்டால் அல்லது ஒன்றிரண்டு பற்கள் போய்விட்டால், இயற்கையான பற்களை போன்ற, செயற்கைப் பற்களை வைத்துக்கொள்ளலாம்.

இதனால் முதியோர், உணவை நன்கு மென்று உண்பதுடன், நல்ல ஆரோக்கியமாக இருக்கலாம். நன்கு மென்று உண்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியும். வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்கலாம்.

பற்களில் ஏற்படும் பற்குழியை, ஆரம்ப நிலையிலேயே அடைப்பது அவசியம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை முதியவர்கள், பல் மருத்துவரிடம் பல் மற்றும் ஈறு பரிசோதனை செய்து கொள்வது முக்கியம்.

பற்களை சுற்றியுள்ள ஈறு மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவற்றை, செயற்கை எலும்பு வைத்தல் மற்றும் ஈறு பிளாப் சர்ஜரி வாயிலாக, சரி செய்ய முடியும்.

தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும். புகையிலை, குட்கா. புகை பழக்கம் உள்ளவர்களுக்கு பற்கள் வீணாகும். வாய் புற்றுநோய் கூட வரலாம். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவது பற்களுக்கு மிகவும் நல்லது.