கார்ட்டிசால் ஹார்மோன் ஏன் அவசியம்? அதிகமானால் தொப்பை வருமா?
கார்ட்டிசால் (Cortisol) என்பது நம் உடலில் சுரக்கும் முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும். நம் உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாட்டிலும் கார்ட்டிசாலின் தலையீடு இருக்கும்.
தேவைக்கு அதிகமாக சாப்பிட்டு, அதற்கேற்ப உடலுழைப்பு இல்லாமல் இருந்தாலும், சரியான நேரத்தில் போதுமான அளவு துாக்கம் இல்லாமல் இருந்தாலும், 'கார்ட்டிசால்' ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.
பொதுவாக, காலையில் எழுந்தவுடன் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகமாக இருக்கும். பகலில் எல்லா வேலைகளையும் முடித்து, இரவில் துாங்கும் நேரத்தில் கார்ட்டிசால் அளவு வெகுவாக குறைந்து விடும்.
மூளைக்கும் இதயத்திற்கும் தடைஇல்லாமல் ரத்த நாளங்களில் 'பம்ப்' செய்யும் வேலையை கார்ட்டிசால் செய்கிறது.
மன அழுத்தத்தின் போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும்; மூச்சு வாங்கும். இந்த சமயத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக தேவை. இதற்கு கார்ட்டிசால் அதிகமாக சுரப்பது அவசியம்.
நேரம் கழித்து துாங்குவது, இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுவது, இரவு நேர வேலை செய்யும் போது, கார்ட்டிசால் அளவு குறையாமல் காலையில் இருந்தது போன்றே இருக்கும்.
இதனால் வயிற்றுப் பகுதியைச் சுற்றிலும் கொழுப்பு சேமிக்கப்படுவது, தொப்பை விழுகிறது. உடல் எடை அதிகரிப்பது, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பது உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.
அதனால் கார்ட்டிசால் ஹார்மோன் அளவோடு இருப்பது மிகவும் அவசியம். அதிக கலோரி, சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் 9 - 10 மணி நேரமும், பெரியவர்கள் 7 - 8 மணி நேரமும் துாங்க வேண்டும். துாக்கம் மட்டுமே கார்ட்டிசால் ஹார்மோனை இயல்பாக நிர்வகிக்கும்.