குழந்தைகளுக்கு சளி பிடிக்கும்போது காது வலிக்கிறதா? அடினாய்டு பிரச்னையாக இருக்கலாம்

பனிக்காலத்தில் வரும் வைரஸ் தொற்றுநோய் மூக்கு, தொண்டையை அதிகம் பாதிக்கும். 'டான்சில்' பிரச்னையால் சாப்பிடும்போது தொண்டை வலியும், எச்சில் முழுங்கும் போதும் வலிக்கும்.

வைரஸ் தொற்றின் போது 'டான்சில், அடினாய்டு' இரண்டும் பெரிதாகி விடும். 'அடினாய்டு' சதை வீங்கி பெரிதாவது தான் காதுவலிக்கான முக்கிய காரணம். இது வெளிப்பார்வைக்கு தெரியாது.

சளி பிடிக்கும் போது மூச்சுவிட முடியாமல் வாய் வழியாக மூச்செடுப்பர். வாயைத் திறந்து துாங்கும் குழந்தைகளுக்கு 'அடினாய்டு' பெரிதாக உள்ளதாக அர்த்தம்.

துாக்கத்தில் குறட்டை விடும் சத்தம் கேட்க முடியும். சத்தத்துடன் மூச்சு விடுவர்.

வைரஸ் தொற்றால் சளி பிடிக்கும் போது யூஸ்டேசியன்' குழாய் சரியாக வேலை செய்யாமல் அடைப்பு ஏற்பட்டு காதிலும் நீர் சேரும்; காது ஜவ்வு வெளிப்பக்கமாக வீங்கி வலியால் அவதிப்படுவர்.

மூக்கில் நீர்வடியும், லேசான காய்ச்சல், மூக்கில் பேசுவது போன்ற பிரச்னைகள் வரும்.

ஒருவாரம், 10 நாட்களில் 'அடினாய்டு' சதை வீக்கம் குறைந்து இயல்பாக சுவாசிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூக்கில் நீர்வடிவது நின்றுவிடும்.

காதில் நீர் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு ஆவி பிடிக்க வைப்பது நல்ல தீர்வு. காய்ச்சல் மருந்து கொடுத்தால் காதிலுள்ள நீர் தொண்டை வழியே இறங்கி விடும்.

சரியான பின் குழந்தை மூக்கால் சுவாசிக்கிறதா என கண்காணிக்க வேண்டும். இரவில் மூச்சுவிட சிரமப்பட்டால் வீக்கம் குறையவில்லை என்று அர்த்தம்.

சிலநேரங்களில் காது கேட்கும் தன்மை குறையும். காதில் சீழ் வடியும். 70 முதல் 80 சதவீதம் காது தொந்தரவுக்கு அடினாய்டு தான் பிரச்னை. எனவே காது வலியை உதாசீனப்படுத்தக் கூடாது.