கடைசி ஓவரில் சென்னை வெற்றி: பெங்களூரு போராட்டம் வீண்
பரபரப்பான பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் கடைசி நேரத்தில் சிங்கம் போல சீறிய சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, டுபிளசி வழிநடத்தும் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
பெங்களூரு பந்துவீச்சை வெளுத்துவாங்கிய கான்வே, 32 பந்தில் அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே, மேக்ஸ்வெல் பந்தில் ஒரு இமாலய சிக்சர் விளாசினார்.
சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன் எடுத்தது. மொயீன் (19), கேப்டன் தோனி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு விராத் கோஹ்லி (6), லாம்ரர் (0) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் டுபிளசி, மேக்ஸ்வெல் ஜோடி சென்னை அணி பந்துவீச்சை வெளுத்துவாங்கியது.
அபாரமாக ஆடிய டுபிளசி, 23 பந்தில் அரைசதம் எட்டினார். சிக்சர் மழை பொழிந்த மேக்ஸ்வெல், 24 பந்தில் அரைசதம் கடந்தார். மொயீன் அலி பந்தில் டுபிளசி (62) சரணடைந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. துல்லியமாக பந்து வீசிய பதிரானா, 10 ரன் மட்டும் வழங்கினார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 218 ரன் எடுத்து தோல்வியடைந்தது.